கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர், ரமேசுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது;
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை, ஏ.டி. எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ், சேலத்தில் விபத்தில உயிரிழந்தார். இந்த வழக்கையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கோடநாடு கொள்ளை சதி திட்டம் குறித்து, தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில் போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தனிபடை போலீசார் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை, கடந்த அக்டோபர் 25 -ந்தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, உதகை மாவட்ட அமர்வுநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் தனபாலுக்கு 11 நாள் போலீஸ் காவலில் விசாரணையும், ரமேஷ்க்கு 10 நாள் விசாரணையும் முடிந்தது. இருவரையும் குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது இருவரும் கூடலூர் கிளை சிறையில் உள்ள நிலையில் கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறு காரணமாக, கூடலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உதகையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.