தொடர்மழை: மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழை நேரத்தில் மரத்தின் அடியிலோ, மின்கம்பங்கள் அருகிலோ,வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.;
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மழை நேரங்களில் மரத்தின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ, வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அருகே உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும், பேரிடர் காலத்தில் கால்நடைகள் இறந்துவிட்டால், அதன் விவரத்தை அருகில் உள்ள கால்நடை உதவி டாக்டரிடம் தகவல் தெரிவித்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கையைப் பெற்று தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள இலவச கால்நடை அவசர ஊர்திக்கான சேவை பெற, 1962 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 6 தாலுகாக்களுக்கு, 6 விரைவு மீட்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுக்களில் உதவி இயக்குனர் மற்றும் கால்நடை டாக்டர் தலைமையில் ஒரு குழுவுக்கு ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் வீதம் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்கு, உடனுக்குடன் கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பேரிடர் காலங்களில் தேவைப்படும் உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம், புற்கள் உதகை கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் போதிய அளவு இருப்பில் உள்ளது. நீலகிரியில் கால்நடை வளர்ப்போர், அவசர காலங்களில் மண்டல இணை இயக்குனரை 9003810687, உதவி இயக்குனரை 9442352793 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.