படப்பிடிப்புகள் நடத்த கொரோனா இல்லை என சான்று பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உதகை நகராட்சி தினசரி சந்தை, உழவர்சந்தை, மத்திய பேருந்து நிலையம், உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை இப்பகுதிகளில் விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதால் வியாபாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்ற வைத்து அவர்களுக்கு பொருட்கள் வழங்குகிறார்கள் எனவும் அனைத்து வியாபாரிகளும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைகள் நகராட்சி மூலம் சீல் வைக்கப்படும் என கூறினார்.
மேலும் சுற்றுலா நகரமான நீலகிரியில் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ள நிலையில் இது குறித்து பேசிய கலெக்டர், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் குழுவினர் கொரோனா தொற்று இல்லை என சான்றளித்தால் மட்டுமே படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.