ஊட்டியில், செயற்கை வர்ணங்கள் பூசி விற்கப்படும், மஞ்சள் நிற வாடாமல்லிக்கு, சுற்றுலா பயணிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், வனங்களை ஒட்டிய பகுதி, பயிர் விளைச்சல் இல்லாத நிலங்களில், 'வாடா மல்லி' எனப்படும், மலர் செடிகள் அதிகளவில் மலர்கின்றன. 'ஹெலிகிரைசம்' என்ற தாவரவியல் பெயரை கொண்ட இச்செடிகளில் உள்ள மலர்கள், ஓராண்டு வரை வாடாமல் இருக்கும் என்பதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட இடங்களில் அவை, கொத்து, கொத்தாக கட்டி விற்கப்படுகின்றன. இந்நிலையில், மஞ்சள், 'பிங்க்' நிறத்தில் மட்டுமே விளையக் கூடிய, வாடா மல்லிக்கு செயற்கை வர்ணம் பூசி விற்கப்படுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதி வியாபாரிகள் சிலர் இது குறித்து கூறுகையில், 'ஊட்டியில் விளையும் மஞ்சள் நிற வாடா மல்லியை, கோவையில் இருந்து வரும் சிலர் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்; பின், செயற்கை வர்ணம் பூசி, பச்சை, ஊதா, சிவப்பு, நீலம் என, பல வண்ணங்களில் அழகுபடுத்துகின்றனர். தவிர, பச்சை நிற இலை, தண்டுகளுக்கு கூட செயற்கை வர்ணம் பூசுகின்றனர். சுற்றுலா பயணிகள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றனர்.