உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்
உதகை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
உதகை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உதகை நகராட்சிக்கு உட்பட்ட சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை மற்றும் கோத்தகிரி சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், இன்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, 12 கடைகளில் இருந்து 9.25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்தியமைக்காக, ரூபாய் 19,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.