கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள ஒருவருக்கு ஜாமீன்
ஜாமீன் பெற ரூ.50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
கோடநாடு கொலை வழக்கில் சயான், திபு, சம்சீர் அலி, ஜித்தின்ஜாய், சதீசன், உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, பிஜின் ஆகிய 9 பேர் ஜாமீனில் உள்ளனர். வாளையார் மனோஜ் குன்னூர் சிறையில் உள்ளார். கடந்த ஜூலை மாதம் கோர்ட் மனோஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
2 நபர்கள் பிணை தர வேண்டும், ரூ.50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. உதகை கோர்ட்டில் மனோஜ் தரப்பு வக்கீல் முனிரத்னம் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜின் ரத்த உறவினர்கள் பிணை தரலாம் என்று நிபந்தனையில் தளர்வு அளித்து உத்தரவிட்டது. தற்போது உதகை கோர்ட்டில் மனோஜின் மனைவி மற்றும் ஒருவர் ஆஜராகினர். மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் மனோஜூக்கு பிணை தருவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இந்த ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வாளையார் மனோஜ் உதகையில் தங்கி இருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை உதகை கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் மனோஜ் ஜாமீனில் வெளியே வர உள்ளார்.