கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
5 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.;
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார் ஓட்டுனர் கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடியும் நிலையில், மீண்டும் 5 நாட்களுக்கு போலீஸ் காவலில் விசாரணை செய்ய மகிளா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் மீது சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை சொல்ல விடாமல் தடுத்தல், உட்பட மொத்தம் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணையில் கார் ஓட்டுநரின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் சேலத்தில் கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் கனகராஜ்ன் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து இன்றுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில் உதகை மகிளா நீதிமன்றத்தில் தனபாலை போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும் மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 5 நாள் விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனிடைய கனகராஜன் உறவினர் ரமேஷிற்கு நாளையுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில் அவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிகிறது.