குற்ற சம்பவங்களை தடுக்க ஊட்டி நகரில் 350 கண்காணிப்பு கேமராக்கள்

குற்றங்களை தடுக்கும் பொருட்டு கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது..

Update: 2021-10-28 09:21 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டம் உதகை சிறந்த கோடை வாசஸ்தலமாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த சமயத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் சமீப காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவின்படியும், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் அறிவுரையின்படியும் நீலகிரியில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன் மூலம் பெரும்பாலான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடந்த குற்றங்களை உடனடியாக கண்டுபிடிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.

ஊட்டி நகரில் முக்கிய பகுதிகளில் கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருகின்றனர். அதில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்படும். இதுவரை 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறும்போது, உதகை நகரில் 210 இடங்களில் 608 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கடை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

தற்போது 178 இடங்களில் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் 2 வாரத்திற்குள் கேமராக்கள் பொருத்தி விடுவதாக உறுதியளித்து உள்ளனர்.

குற்றங்களை தடுக்கும் பொருட்டு கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இது மிகவும் வரவேற்கத்தக்கது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News