நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை; பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து ஆ. ராசா எம்.பி ஆலோசனை
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து, எம்.பி ஆ. ராசா தலைமையில், ஆலோசிக்கப்பட்டது.;
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆ. ராசா எம். பி. தலைமையில் நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கூட்டத்தில் ஆ. ராசா எம். பி. பேசியதாவது,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தால் 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண்சரிவை உடனடியாக சரி செய்யும் வகையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான ஜே. சி. பி. எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு போன்றவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் மின்சார வாரியத்தின் மூலம் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மஸ் போன்ற மின்சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு ப்பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதல்நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். நோடல் அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளை தூர்வார வேண்டும்.
மண்சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் ஆ. ராசா கூறுகையில்,
மலைவாழ் மக்கள் பெருமளவில் வாழுகின்ற பகுதியில் போதுமான போக்குவரத்து, சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது, என்றார்.