பிபின் ராவத்திற்கு அஞ்சலி: நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 13 ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்பட வணிக நிறுவனங்கள் அனைத்தும் இன்று காலை முதல் அடைக்கப்பட்டுள்ளன; இன்று மாலை 6 மணிக்கு பிறகே கடைகள் திறக்கப்படும்.
இதுதவிர வியாபாரிகள் சங்கம் சார்பில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் வீரமரணத்திற்கு ஊர்வலகமாகச் சென்று அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட கடைப்பகுதிகள், வெறிச்சோடியுள்ளன.