பந்தலூர்; ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்
Nilgiri News, Nilgiri News Today- பந்தலூர் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை, ராணுவ வீரர் காப்பாற்றினார்.;
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் தொடர்மழை காரணமாக அத்திகுன்னா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக்(வயது 7) என்ற சிறுவன், ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் சிறுவனை நெருங்கக் கூட முடியவில்லை. வேகமாக அடித்துச் சென்ற ஆற்றுநீரில் சிக்கிக்கொண்ட சிறுவனை காப்பாற்ற முடியாமல், அங்கிருந்த பலரும் தவித்தனர்.
இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த மத்திய துணை ராணுவப்படை வீரரான ஜேம்ஸ் என்பவர் ஆற்றில் குதித்து நீண்டதூரம் நீந்தி சென்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் சிறுவன் சாபிக்கை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை, சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய ராணுவ வீரர் ஜேம்சுக்கு பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து அத்திகுன்னா ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பெற்றோர்களே... உஷார்
தற்போது, தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள ஆறு, குளம், குட்டை, கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் இத்தகைய நீர்நிலைகளுக்குச் செல்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இதுபோன்ற நீர்நிலைகளுக்கு செல்லாமல், கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.