ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை; ஜூலை 30 வரை நீட்டிப்பு
Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி சிறப்பு ரயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்றடையும். ஊட்டி கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு மலை ரயில் சேவை, நாளை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து மலை ரயிலில் பயணிப்பதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் பகல் 2.45 மணிக்கு ஊட்டி சென்றடையும். இதேபோல் ஜூலை 2-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் இருந்து முற்பகல் 11.25 மணிக்குப் புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். தினசரி இயக்கப்படும் ஊட்டி மலை ரயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரயிலுக்கும் (வண்டி எண். 06171, 06172) ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஒருமுறையேனும் ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இது 46 கிலோ மீட்டர் பயணமாகும். இதில் மேட்டுப்பாளையம் கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் மேலே அமைந்துள்ளது. அதே நேரத்தில் ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் மேலே அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாக ஊட்டி இருக்கிறது. இது உதகமண்டலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு மட்டுமின்றி, மிகவும் பிரபலமான ஹனிமூன் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் ஊட்டி திகழ்கிறது. இதன் காரணமாகவே ஊட்டி மலை ரயிலில் இருக்கைகள் எப்போதும் காலியாக இருப்பதில்லை. ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஊட்டி மலை ரயில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 10.4 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்கும். எனவே இந்தியாவில் மெதுவாக செல்லும் ரயில்களில் ஒன்றாக ஊட்டி மலை ரயில் கருதப்படுகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான 46 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு இந்த மலை ரயில் சுமார் 4.30 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்த வேகம் மெதுவானது என்றாலும் கூட, பயணத்தின்போது ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
இந்த மலை ரயில் தனது பயணத்தின்போது 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும், 208 வளைவுகளையும் கடந்து செல்லும். இதையெல்லாம் கேட்கும்போதே ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் ஊட்டி செல்லும் வழியில், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி மற்றும் லவ்டேல் போன்ற ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இந்த ரயில்வே ஸ்டேஷன்களும் இயற்கை அழகு கொஞ்சும் வகையில் அமைந்துள்ளன. எனவே ஒட்டுமொத்த பயணமும் ரசிக்க கூடியதாக இருக்கும். இந்தியாவில் இயங்கி வரும் ஒவ்வொரு ரயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இதில் ஒரு சில ரயில்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டிய ரயில்களின் பட்டியலில் இடம் கிடைக்கும். இந்த பட்டியலில் ஊட்டி மலை ரயிலுக்கு முக்கியமான இடம் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.