பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வு; நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளின் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், அவரை, பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி ஒரு சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
நீலகிரியில் விளையும் புஷ் பீன்ஸ் தரம் மிக்கதாகவும் சைவ பிரியாணி, பாஸ்ட் புட் ஆகியவற்றுக்கு அதிகம் பயன்படுத்தப் படுவதாலும், இதற்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த பயிர் முற்றாத நிலையில் புஷ் பீன்ஸ் ஆகவும், நன்கு முற்றிய பயிர்களில் உள்ள விதைகள் அவரைக் கொட்டைகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சையாக விற்பனை செய்தாலும், முற்ற விட்டு விதைகளாக விற்பனை செய்தாலும் இதற்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருவதால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா, எரிசிபெட்டா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அதிக அளவில் புஷ் பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். அவை தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்தநிலையில் காய்கறி மண்டிகளில் புஷ் பீன்சுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால், அதை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ் பீன்ஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.80 ஆக இருந்தது. ஆனால் தற்போது முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷங்களுக்கு புஷ் பீன்ஸ் வாங்குவது அதிகரித்து வருவதால், சந்தையில் அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்ந்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் புஷ் பீன்ஸ் கிலோ ரூ.133-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே அதைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூண்டு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமவெளி பகுதியாக மசினகுடி ஊராட்சி விளங்குகிறது. இங்கு மிதமான தட்ப வெப்ப காலநிலை நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் பல்வேறு காய்கறி விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் மலை பிரதேச காய்கறிகள் மற்றும் பூண்டு விவசாயம் பரவலாக நடந்து வருகிறது.
இதேபோல் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளிலும் பூண்டு பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் விளையும் பூண்டுக்கு தனி மவுசு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் வட மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.
இதுகுறித்து பூண்டு விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இப்பகுதியில் விளையும் பூண்டுகளை மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் பூண்டு பயிரிடுபவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கிறது. 3 மாத பராமரிப்பு பணி மேற்கொண்டால் விளைச்சலுக்கு தயாராகி விடும். மசினகுடி பகுதியில் பூண்டு விவசாயத்தை இன்னும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விற்பனை சந்தையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிகம் பயன் பெறுவார்கள், என்றனர்.