அதிக லாபம் தரும் கொய்மலர் சாகுபடி; நீலகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

Nilgiri News- நீலகிரி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக ஐட்ரோ ஜென்யா கொய்மலர் சாகுபடி அதிக லாபம் தருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-09-14 15:28 GMT

Nilgiri News- நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது.

Nilgiri News, Nilgiri News Today- இந்தியாவிலேயே முதல் முறையாக கோத்தகிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐட்ரோ ஜென்யா கொய்மலர் சாகுபடி தொடங்கப்பட்டது. இது கென்யா மற்றும் ஆலந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே வளரும் மலர்ச்செடிகள் ஆகும்.

அதனை இங்கு உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து, கடந்த ஓராண்டாக அதிக சாகுபடியும் செய்து வெற்றி பெற்று உள்ளனர். ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சி வப்பு என 3 நிறங்களில் பூக்கும் இந்த மலர்களுக்கு, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. லாபமும் கொட்டுவதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

நீலகிரியில் கொரோனா பேரிடர் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகளில் ஒரு சிலர், பந்துபோல கொத்துக் கொத்தாக வளரும் ஐட்ரோ ஜென்யா மலர்களை சாகுபடி செய்து தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பசுமை குடில் அமைத்து, இங்கு கார்னீசியன், ஜர்பரா, லில்லியம் ஆகிய கொய்மலர்கள் பயிரிடபட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள், திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய ஐட்ரோஜெனியா மலர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலர் செடிகள் வளர ஏற்ற காலநிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. எனவே இங்கு தற்போது மலர் சாகுபடி வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கொய்மலர் விவசாயிகள்  கூறியதாவது,

விவசாய நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து அங்கு மண்ணுக்கு பதிலாக, தேங்காய் நார் மற்றும் உரங்கள் அடங்கிய கலவை போட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோ ஜெனியா மலர் நாற்றுகளை நடவு செய்து, உரிய முறையில் பராமரித்து வருகிறோம். அப்படி செய்து வந்தால் ஓராண்டில் பூக்கள் மலர துவங்கும். ஒரு முறை பயிரிட்டால் 20 ஆண்டுகள் வரை மலர்கள் தொடர்ந்து வளர்ந்து பலன் அளிக்கும். ஆவணி மாதத்தில் சுப முகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால் இந்த மலர்களின் தேவை அதிகரித்து உள்ளது.

ஒரு மலருக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இவ்வகை மலர், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் இங்கு சாகுபடி யாகும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் கோத்தகிரி கொய்மலருக்கு வெளிநாடு களில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மலரை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு கணிசமான லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது, என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News