குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

நீலகிரியில், சாலையில்லாத பல்வேறு பழங்குடியின கிராமத்தில் நோயாளிகளை மீட்டு வரும் வகையில் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-14 05:32 GMT

நீலகிரி மாவட்டத்தில், சாலையில்லாத பல்வேறு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று முதலுதவி மற்றும் நோயாளிகளை மீட்டு வரும் ஆம்புலன்ஸ்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு வகையை சேர்ந்த சுமார் 27 ஆயிரம் பழங்குடியின மக்கள், வனப்பகுதியை ஒட்டியள்ள உதகை மந்து, புதுக்காடு, சேம்பக்கரை, ஆணைப்பள்ளம், பம்பலகொம்பை, கோழிக்கரை, குரும்பாடி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்திலும் அவர்கள் பாரம்பரியம் மாறாமல் வாழ்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள இவர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் இருந்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் உட்பட வயதானவர்களும்,  ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்வதற்கு பல கிலோமீட்டர் தொலைவை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் பெரும்பாலான பழங்குடியினர் கிராமங்களில், சாலை வசதி சரியான முறையில்  இல்லை; பராமரிப்பு இல்லாத சாலையால், தனியார் வாடகை வாகனங்கள் மலைவாழ் கிராமங்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. வனவிலங்குகளின் அச்சுறுத்தலால்,  நடந்து செல்ல முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டு குழியுமான சாலைகளை கடந்து, மலைவாழ் மக்களின் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கே  சென்று , கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை அழைத்து வரும் வகையில், தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. மலைவாழ் மக்களை தேடி மருத்துவச்சேவை கிடைக்கச் செய்யும் மாவட்ட நிர்வாகத்திற்கு, அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News