இரண்டு குட்டிகளை ஈன்ற காட்டு யானை: வனத்துறையினர் வியப்பு
காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்த வனத்துறையினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர்;
இரண்டு குட்டிகளை ஈன்ற காட்டு யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.
இங்குள்ள பழைய வரவேற்பு மையம் அருகே, வனப் பகுதியில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டது. இந்நிலையில், கூட்டத்தில் இருந்த பெண் யானை, இரு தினங்களுக்கு முன், அப்பகுதியில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
தகவலறிந்த வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று, ஆய்வு செய்தனர். ஆய்வில், காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்து, வியப்படைந்தனர்.
தொடர்ந்து, யானைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக வனத்துறையினர் கூறுகையில், கர்நாடகாவில் ஒரே காட்டுயானை இரண்டு குட்டிகளை ஈன்றிருப்பது இது இரண்டாவது முறையாகும். இரண்டு குட்டிகளும் நலமாக உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனக் கூறினர்.