உதகை அருகே விஷம் வைத்து புலியை கொன்ற 2 பேர் கைது
முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் 2 குட்டிகளை ஈன்ற பெண் புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமப்பகுதியில் , 5 மாதங்களுக்கு முன்பு, இரு குட்டிகளை ஈன்ற பெண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதைப்பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள், உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், இரு குட்டிகளை மீட்ட வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே, புலிக்கு பிரேத பரிசோதனை செய்ததில் அது விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, வனத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக, மசினகுடி குறும்பர் பாடி பகுதியை சேர்ந்த பழங்குடியினர் கரியன் என்பவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், தொடர்ந்து கால்நடைகளை தாக்கி கொன்று வந்ததால் ,புலிக்கு விஷம் வைத்து கொன்றதாக, அவர் ஒப்புக்கொண்டார். புலிக்கு விஷம் வைத்த பழங்குடியினர் கரியன், அகமது கபீர், சதாம், செளகத் அலி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கரியன் மற்றும் அகமது அலி ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சதாம், செளகத் அலி ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.