கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இதுவரை 4 மனித உயிர்களையும் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும்கொன்ற புலியை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-10-01 14:32 GMT

ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கக்கோரி, மசனகுடி பஜாரில் 6 மணி நேரம் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மூன்று மனித உயிர்களையும் இன்று ஒருவர் என,  நான்கு பேரையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற ஆட்கொல்லி புலி, இதுவரை வனத்துறையினர் வசம் சிக்காமல் உள்ளது.

இன்று, மசனகுடி சிங்காரா பகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மங்கள பசவன் என்பவரை தாக்கி கொன்றது. இது,  அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் வனத்துறையினர் புலியை உடனடியாக சுட்டுப்பிடிக்க வேண்டும் என மசனகுடி பஜாரில்,  கர்நாடக - கேரள- தமிழக, பிரதான சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இவர்களுடன்,  வனத்துறை மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியல் ஈடுபட்டதோடு, புலியை சுட்டுக் கொன்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கோஷங்களை எழுப்பி,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,  சற்று நேரத்திற்கு முன்பு, ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆறு மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. புலியை சுட்டு பிடிக்க உத்தரவிட்டதையடுத்து, நாளையாவது புலி சிக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News