கூடலூரில் வளர்ச்சிப்பணிகள்: வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
கூடலூர் உழவர் சந்தை மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளை, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் பேருந்து நிலையத்தில் 4.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் மழை, வெள்ளத்தால் கோல்டன் அவென்யூ பகுதியில் சேதமடைந்த பாலத்தையும், கூடலூர் உழவர் சந்தையையும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதேபோல் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், கூடலூர் பேருந்து நிலையத்தில் 4.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன். டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடித்து விடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், நகராட்சி ஆணையர் பாஸ்கரன், வட்டாட்சியர் தினேஷ் ,மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.