கூடலூரில் 12வது நாளாக தொடரும் வேட்டை: ஆட்கொல்லி புலி சிக்குமா?
இதில் ஈடுபட்டுள்ள 150 பேர் கொண்ட 20 குழுக்கள் என ஒட்டு மொத்த வனத்துறைக்கு 12 நாட்களாக டிமிக்கி கொடுத்து வருகிறது புலி.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி வனப்பகுதியில், ஆட்கொல்லி புலி நடமாடுகிறது. இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, ஆட்கொல்லியாக மாறிய புலியை உயிருடனோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி, 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், அதிரடிப் படையினர் புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இப்பணியில், 120 பேர் 20 குழுக்களாகப் பிரிந்து வனத்துறை கடந்த 10 நாட்களாக தேடி வருகின்றனர்.
மசினகுடி - சிங்காரா வனப்பகுதியில், மூங்கில் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் ஆட்கொல்லி புலியை வெளியே கொண்டு வருவதற்காக, 2 மாடுகளும் 1 கன்று குட்டியையும் வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்றனர். மேலும் தற்போது கனமழை ஓய்ந்துள்ளதால் மீண்டும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாகி உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் புலி பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றிலும் மரத்தின் மீது பரண் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மசினகுடி - சிங்காரா சாலையில் 30 மீட்டர் இடைவெளியில், ஒவ்வொரு மரத்திலும் 2 வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தின் மீது அமர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது, தலைமை வன உயிரின பாதுகாவலர், முதுமலை கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் மற்றும் மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர்கள் ஆகியோர் மீண்டும் வனத்திற்குள் விரைந்துள்ளனர். அடுத்தடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.