மறுபடியும் வந்திட்டேன்னு சொல்லு..! : 4 மாதத்திற்கு பின் வெளியே வந்த ஒற்றைக்கொம்பன் யானை
கூடலூர் பகுதியில் 3 பேரை கொன்ற ஒற்றை கொம்பன் காட்டு யானை 4 மாதத்திற்கு பின் மரக்கூண்டிலிருந்து வெளியே வந்தது.
நீலகிரி : கூடலூர்
வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. 3 பேரை கொன்று மூர்க்கத்தனமா இருந்த ஒற்றை கொம்பன் சங்கர் மரக்கூண்டிலிருந்து 4 மாசத்துக்கு பின்னாடி, இப்போ கும்கியா வந்துட்டேன்னு சொல்லு' என்று சொல்வது போல கம்பீரமாய் வெளியே கொண்டு வரப்பட்டது, ஒற்றைக்கொம்பன் சங்கர்.
கூடலூரில் தந்தை,மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டுயானை சங்கர், நான்கு மாதமாக கரோலில் பயிற்சிக்குப் பின் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்யப்பட்டு கும்கியாக வெளியே கொண்டுவரப்பட்டது. கூடலூர் சேரம்பாடி பகுதியில் மூன்று பேரை கொன்ற காட்டுயானை சங்கர் தமிழக மற்றும் கேரள வனப்பகுதியில் இரு மாநில வனத்துறைக்கு சிக்காமல் இருந்தது. நீண்ட முயற்சிக்கு பின் அந்த யானை தமிழக வனத்துறைக்கு சிக்கியது இதையடுத்து பிடிபட்ட யானையை முதுமலையில் உள்ள அபயாரண்யம் பகுதியில் கரால் மரக்கூண்டு அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டது.
மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதோடு தும்பிக்கையால் மரங்களை தூக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தியது. இது வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் சவாலாக இருந்தது பின்னர் அந்த யானை படிப்படியாக சாந்தமாக மாறி வனத்துறையின் கட்டுக்குள் வந்தது. நான்கு மாதத்திற்கு பின் 3 பேரைக் கொன்ற காட்டுயானை சங்கர் பாகனின் சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு குழந்தையாக மாறியது.
இதையடுத்து பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வனத்துறை மூலம் கூண்டில் பயிற்சி அளிக்கப்பட்ட சங்கர் யானை இன்று வெளியே கொண்டு வரப்பட்டது மூர்க்கத்தனமான இருந்த காட்டுயானை குறுகிய நாட்களிலேயே சொல்பேச்சு கேட்டு கும்கியாக மாற்றப்பட்டது. இதையடுத்து முதுமலை அபயாரண்யத்தில் உள்ள யானைகள் முகாமில் மற்ற கும்கி யானைகளுடன் தனது பயணத்தை தொடங்க விருக்கிறது.