நீலகிரி மாவட்டத்தில் அவசரம் உணர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் பார்க்கப்பட்ட பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் நலமுடன் பிறந்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் நாடுகாணி பகுதியில் இருந்து இன்று காலை 108 ஆம்புலன்ஸ்க்கு அவசர அழைப்பு வந்தது.
தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசரம் உணர்ந்து அன்னபூரணி என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு, பிரசவம் பார்த்ததில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்ட்ரெட்சர் மூலம் கொண்டு செல்லும்போது மீண்டும் அவசரம் உணர்ந்து பிரசவம் பார்த்ததில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரண்டு குழந்தைகளையும் தாய் அன்னபூரணியையும் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதித்தனர்.
தொடர்ந்து இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க மகளிர் தினத்தன்று அவசரம் உணர்ந்து பிரசவம் பார்த்ததில் இரண்டு பெண் குழந்தைகள் நலமுடன் பிறந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான இ.எம்.டி. யுகபாலன், பைலட் சுரேஷ், மற்றும் ரதீஷ் ஆகியோருக்கு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட பொறுப்பாளர் விக்னேஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.