போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘விசிட்’ அடித்த கரடி..! ‘புகார் அளிக்க வந்ததோ..?’ என நெட்டிசன்கள் கிண்டல்
Nilgiri News, Nilgiri News Today- கூடலூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாகத்துக்குள் கரடி வந்து சென்ற நிகழ்வு, சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, வைரலானது.
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத்தில் இருந்து, இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது. அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக, கூடலூா் நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிர்ச்சியடைந்த போலீசார்
இரவு நேரங்களில், போலீஸ் ஸ்டேஷன்களில் சொற்ப எண்ணிக்கையில் அதாவது ஓரிரு போலீசார் மட்டுமே பணியில் இருப்பது வழக்கம். போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘விசிட்’ செய்த கரடி, ஸ்டேஷன் வளாகத்தில் மட்டும் அங்கும் இங்கும் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, கிளம்பி விட்டது. ஒருவேளை, ஸ்டேஷன் எப்படி இருக்கிறது, சிறை அறைகள் எப்படி இருக்கின்றன என, பார்க்கும் ஆவலில், ஸ்டேஷனுக்குள் நுழைந்து இருந்தால், அங்கு இருந்த போலீசாரின் நிலை பாதுகாப்பற்றதாக போயிருக்கும். இதனால், சிசிடிவி கேமராவில், கரடி வந்த காட்சிகளை பார்த்து, போலீசார் சற்று அதிர்ச்சியடைந்து விட்டனர். என்றாலும், வனவிலங்குகள் நிறைந்த ஊட்டியில், குடியிருப்புகளுக்குள், அரசு அலுவலக பகுதிகளுக்குள் இதுபோல் புலி, சிறுத்தை, கரடி போன்றவை வருவது சகஜம்தானே, என்றும் தங்களை தாங்களே சமாதானமும் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரடி, போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு வந்த வீடியோ, வைரலாகி வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை வந்த கரடி, புகார் மனு எழுதி வராததால், ஸ்டேஷனுக்குள் சென்று போலீசாரை சந்திக்கவில்லையோ, என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து, கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.