நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றிதிரிந்த யானை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதியாக உள்ள சிங்காரா வனச்சரகத்தில் சுமார் 40 வயதுள்ள ஆண் யானை ஒன்று கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக உடலில் காயத்துடன் சுற்றி திரிந்துள்ளது. இந்த யானைக்கு உடலில் உள்ள காயம் ஆறுவதற்காக பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்து வனத்துறையினர் வழங்கியதோடு அந்த யானையை கண்காணித்தும் வந்தனர். தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதன் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை சுத்தப்படுத்தி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சிங்காரா சாலையில் யானை நின்றதால் சுமார் 4 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் யானையின் காதுப் பகுதி காயம் அழுகி இரத்தம் தொடர்ந்து வடிந்துள்ளது. இந்நிலையில் முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் விஜய், வசீம் ,கிருஷ்ணா , கிரி துணையுடன் கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.அங்கிருந்து யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே யானை இறந்துள்ளது. இதனால் மருத்துவக்குழு மற்றும் வனத்துறையினர் கவலையடைந்தனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே தகவல் தெரிவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.