நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா பொது ஊரடங்கிற்கு பிறகு தமிழக அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் உடல் வெப்ப பரிசோதனை செய்து அவர்களின் விவரங்களும் பதிவு செய்து கைகளை சுத்தமாக கழுவி வகுப்பறைக்குள் செல்லும் முன் கிருமிநாசினி பயன்படுத்திய பின்பு மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் கூறுகையில், அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைப்பிடித்து கட்டுப்பாடுகளுடன் ஒரு வகுப்பில் 17 மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படும் என கூறினார். பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் ஆர்வமுடன் இருப்பதாகவும் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் மூலமே படித்திருந்த தங்களுக்கு இன்று பள்ளிகள் மூலம் வகுப்பு எடுப்பதை வித்தியாசமாக உணர்வதாக மாணவிகள் தெரிவித்தனர்.