லாரியில் இருந்த இரும்பு கூண்டு சரிந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே லாரியில் இருந்த இரும்பு கூண்டு சரிந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
சத்தீஸ்கார் மாநிலம் பஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்தவர் ராகுல் குமார் (18). இவர் திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தில் உள்ள தனியார் உர கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
ராகுல்குமார் சம்பவத்தன்று, திருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில் இருந்து லாரியில் இரும்புக் கூண்டு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சீதாராம்பாளையம் பகுதியில் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது திடீரென இரும்பு கூண்டு ராகுல் குமார் மீது சரிந்தது.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.