சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்க கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை
சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை.
சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று கொமதேக எம்எல்ஏ., ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தி அனைத்து கார் உற்பத்தி தொழிற்சாலைகளையும் மூடிவிட்டது. இதனால் அந்த கம்பெனியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழகத்தில் சென்னை மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டதால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் சணந்த் என்ற இடத்தில் மூடப்பட்ட ஃபோர்ட் தொழிற்சாலையை ரூ. 750 கோடிக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் அழைப்பின் பேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் சென்னைக்கு வந்து முதல்வரை சந்தித்து சென்னை ஃபோர்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து பேசியுள்ளார். தமிழக அரசின் சார்பில் என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதெல்லாம் அவரிடம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென்று குஜராத்தில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமா அல்லது தமிழக அரசு வாய்ப்பை நழுவ விட்டு விட்டதா. பல ஆயிரம் தமிழக தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்கின்ற முயற்சியில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டு சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.