நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காளியண்ண கவுண்டர் பெயர்: எம்எல்ஏ கோரிக்கை
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு டி.எம்.காளியண்ண கவுண்டர் பெயரை சூட்ட வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு டி.எம்.காளியண்ண கவுண்டர் பெயரை சூட்ட வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருச்செங்கோடு நகரைச் சேர்ந்த காளியண்ணன் கவுண்டர் எம்எல்ஏவாக, எம்எல்சியாக, எம்.பியாக பல்வேற காலங்களில் பணியாற்றியுள்ளார். அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். கொங்கு மண்டல மக்கள், அவர் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு, தனது 101 வயதில் கொரோனா தொற்று பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட்டார். தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில், காளியண்ணகவுண்டரின் சிறப்பை பாராட்டும் வகையில், போலீசாரின் இறுதி மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையிலும் அவரது மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு சிறப்பு பெற்ற தியாகி காளியண்ணகவுண்டர் பெயர், இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் எந்த திட்டத்திற்கும் வைக்கப்படவில்லை. நாமக்கலில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரிக்கு டி.எம். காளியண்ண கவுண்டரின் பெயர் சூட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அவருக்கு பெருமை சேர்த்தால் கொங்குமண்டல மக்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறப்பட்டுள்ளது.