எலச்சிபாளையம் அருகே தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
எலச்சிபாளையம் ஊராட்சி, அக்கலாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அக்கலாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, கோவிட் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தை சிறுமி ஜனனியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தது, தடுப்பூசி முகாம்களை பார்வையிடுதல் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவுகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டம் துவக்கி வைத்தல் சம்மந்தமான படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.