திருச்செங்கோடு உழவர் சந்தைக்குள் சூழ்ந்த வெள்ளம்: சிக்கித்தவித்த மூதாட்டி மீட்பு
திருச்செங்கோடு பகுதியில் கனமழையால், உழவர் சந்தைக்குள் வெள்ளம் சூழ்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிகனமழை பெய்தது. திருச்செங்கோடு பகுதியில் 53மி.மீ மழை பதிவானது. மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
உழவர் சந்தையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து உள்ளே சென்றதால் விவசாயிகளும், பொதுமக்களும் நடக்க முடியால் பாதிப்படைந்தனர். ஈரோடு ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடுப்பளவுக்கு தண்ணீர் வந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அங்கு மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த மூதாட்டி ஒருவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும் கனமழைக்கு திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி நின்றதால் தண்ணீர் வடியும் வரை யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்படது.
இதேபோல் எலச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சின்ன எலச்சிபாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உப்புக்குட்டை ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் ஓடை வழியாக சென்று மாணிக்கம்பாளையம் நெடுஞ்சாலையில் பாய்ந்தோடி தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் எலச்சிபாளையம் வழியாக மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவுவாயிலில் தண்ணீர் தேங்கி நின்றதால் அலுவலர்களும், பொதுமக்களும் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், எலச்சிபாளையம் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தண்ணீர் புகாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.