மல்லசமுத்திரம் அருகே குடும்ப தகராறால் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை
மல்லசமுத்திரம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்செங்கோடுவ:
மல்லசமுத்திரம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( 49). இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சரண்யா(38). இவர்களுக்கு தனுஷ் (18) என்ற மகனும், திவ்யதர்ஷினி (16) என்ற மகளும் உள்ளனர். கணேசன் 2020-ம் ஆண்டு முதல் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கணேசன் வீட்டிற்கு வந்தபோது மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்து, வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து மயக்கம் அடைந்ததாக தெரிகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏட்டு கணேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.