திருச்செங்கோடு பள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவனை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியையை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் ரிதுன், அதே பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியை ஒருவரின் நடவடிக்கையால், விரக்தியடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை கண்டித்தும், மாணவரின் இறப்பிற்கு காரணமான ஆசிரியை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரை கைது செய்யக் கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆனங்கூர், அண்ணாநகர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வெப்படை - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு திருச்செங்கோடு ஒன்றிய துணை செயலாளர் சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் öருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வக்கீல் கோபி, மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
மாணவனை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியை மற்றும் உறுதுணையாய் இருந்த தலைமை ஆசிரியை ஆகியோரை கைது செய்ய வேண்டும், தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவன் ரிதுன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் கிளைச்செயலாளர் மோகன்குமார் நன்றி கூறினார்.