தற்கொலைகளை தடுக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை

மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.

Update: 2021-12-25 03:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட அரசு மனநலக் காப்பகம் சார்பில், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. மனநல ஆலோசகர் ரமேஷ், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி கலந்துகொண்டு பேசுகையில், மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்க முடியாமலும், போராட்டங்களை எதிர்த்து போராட முடியாமலும் தன்னை முடித்துக் கொள்வதுதான் தற்கொலை மனம். அப்போது சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடும்.

தற்கொலை எண்ணத்தை ஒரு நோயாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொண்டால் விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றலாம். குடும்பம், நண்பர்கள், சக ஊழியரிடம் என்ன நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். ஏதாவது மாற்றத்தை நீங்கள் கவனித்தால் நெருங்கிச் சென்று ஆறுதலாக பேசுங்கள். பிறருக்கும் என்ன உதவி தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவை அவருக்கு அளியுங்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒருவர் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டதும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டால் அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மது, சிகரெட் போலவே செல்போன், சமூக வலைதளங்களும் ஒருவித போதை பழக்கம். அளவோடு பயன்படுத்தினால் பிரச்னைகள் இல்லை. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரத்துக்கு மேல் செல்போன் பயன்படுத்தக் கூடாது. இண்டர்நெட் வசதி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாத நிலைக்கு மாற்றமடைந்துள்ளோம். இதனால் பதற்றம், அழுத்தம் ஏற்படுகிறது என்றார்.

எனவே சமூக வளைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார். திரளான மாணவமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News