கொல்லிமலையில் மானை தோட்டத்தில் புதைத்த இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்
கொல்லிமலையில் உயிரிழந்த மானை தோட்டத்தில் புதைத்த, 2 விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.;
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பைல்நாடு பகுதியில், மின்வேலியில் சிக்கி உயிரிழந்த மான்களை விவசாய நிலத்தில் புதைத்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், வனத்துறை பறக்கும் படை அலுவலர் பழனிசாமி, ராசிபுரம் வனச்சரகர் தனபால் ஆகியோர், பைல் நாடு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மேக்னிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணி (62) என்பவரின் விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி இரு மான்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் தனது உதவியாளருடன் சேர்ந்து இறந்த மான்களை தோட்டத்தில் புதைத்துள்ளார். இதையொட்டி சுப்ரமணி, அவரது தோட்டத்தில் வேலை செய்துவந்த அப்புசாமி (58) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் தலா ரூ. 50 ஆயிரம் வீதிம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.