எருமப்பட்டி: சிறுவன் மற்றும் பெண்ணை தாக்கிய டாஸ்மாக் விற்பனையாளர் கைது

நாமக்கல் அருகே பெண் மற்றும் சிறுவனை தாக்கியதாக, டாஸ்மாக் கடை விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-18 02:45 GMT

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி கிராமம், இந்திரா நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரேவதி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 13 வயதுடைய இளைய மகன் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிர்மலா செல்வம் என்பவரின் பேரன், 13 வயது சிறுவனை திட்டியதாகவும், அதனால் கோபம் அடைந்த சிறுவன் நிர்மலா செல்வத்தின் பேரனை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த நிர்மலா செல்வம், சிறுவனை கண்டிதுள்ளார். இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு சென்ற சிறுவன் நடந்ததை கூறினான். இதையடுத்து 2 மகன்கள் மற்றும் தந்தையுடன் ரேவதி, அதே பகுதியில் உள்ள நிர்மலா செல்வத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயம் அங்கு வந்த நிர்மலா செல்வத்தின் மைத்துனர் கருணாகரன் (47) என்பவர்,  ரேவதியின் மூத்த மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும். மண்வெட்டியால் ரேவதி மற்றும் அவருடைய தந்தை மாணிக்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த அவர்களை,  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேவதி எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சிறுவன் மற்றும் பெண்ணை தாக்கியதாக, கருணாகரனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருணாகரன் நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

Tags:    

Similar News