எருமப்பட்டி அருகே தேர்வுக்கு பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே தேர்வுக்கு பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், விவசாயி. இவரது மகள் காவ்யா ( 18). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு நாமக்கல்லில் உள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படித்து வந்தார். விரைவில் இந்த படிப்புக்கான தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மாணவி காவ்யா சரியாக படிக்காததால், தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாது என்று பயத்தில் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். வீட்டுக்கு வந்து மகளைக்கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவ்யா உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.