பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா
சேந்தமங்கலம் அருகே சிவன் கோயிலில் நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் உழவாரப் பணி நடைபெற்றது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம், பசுமை நாமக்கல், நாமக்கல் நல்லோர் வட்டம், நேரு யுவகேந்திரா, நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம் மற்றும் பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் திருப்பணிக் குழு ஆகியன சார்பில், நஞ்சுண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் உழவாரப் பணி நடைபெற்றது.
தமிழக பொதுப்பணித் துறை இணைச் செயலாளர் மகேஸ்வரி, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கோயில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் உள்ள மரக்கன்றுகள் நடப்பட்டு,பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மூலம் உழவாரப் பணி நடைபெற்றது.
சேந்தமங்கலம் தாலுக்கா, பழையபாளையத்தில் பெரிய ஏரி, சின்ன ஏரியின் நடுவில் அமைந்துள்ள இக்கோயிலை முழுமையாக சீரமைக்கும் முயற்சியில் திருப்பணிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை நாமக்கல் ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.