ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவிகள் தவறி விழுந்து காயம்: பொதுமக்கள் சாலை மறியல்
Kollimalai Road - கொல்லிமலையில் சரக்கு ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள் தவறி கீழே விழுந்த காயமடைந்தனர்.
Kollimalai Road -நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், உள்ள பைல்நாடு பஞ்சாயத்து, கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (16). மேல்பூசணி குழிப்பட்டியை சேர்ந்தவர் ரூபிகா (16). இவர்கள் இருவரும் கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் உள்ள ஜி.டி.ஆர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். மாணவிகள் இருவரும் தினசரி கொல்லிமலையில் இருந்து ராசிபுரத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் அரசு பஸ்சை தவற விட்டனர். இதனால் அவர்கள் கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கி காய்கறி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோவில் பின்னால் அமர்ந்து சென்றனர். ஆட்டோவை கொல்லிமலை நரியன்காடு பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (32) என்பவர்ஓட்டி சென்றார்.
மலைப்பாதையில் சென்ற ஆட்டோ, மேல் பூசணி குழிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஒரு வளைவில் திரும்பியது. அப்போது ஆட்டோவிற்கு மேல் அமர்ந்திருந்த அகிலா, ரூபிகா இருவரும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் திரண்டனர். அவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன், ஆர்ஐ சேகர், விஏஓ கண்ணன் மற்றும் போலீசார் மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மலைவாழ் மக்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவிகள் சரக்கு ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த சம்பவம் குறித்து, செங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் சிவப்பிரகாசத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2