நாமகிரிப்பேட்டையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் விற்பனை
நாமகிரிப்பேட்டையில் உள்ள ஆர்சிஎம்எஸ் சொசைட்டியில் நடைபெற்ற மஞ்சல் ஏலத்தில், ரூ.80 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.
நாமகிரிப்பேட்டையில் உள்ள ஆர்சிஎம்எஸ் சொசைட்டி கிளையில், வாரம்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், சேந்தமங்கலம், காரவள்ளி, நடுக்கோம்பை, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மஞ்சளை விற்பனைக்கு வந்திருந்தனர்.
சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, நாமகிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சள் கொள்முதல் செய்தனர். விரலி ரகம் 1,500 மூட்டை, உருண்டை ரகம் 400 மூட்டை, பனங்காலி ரகம் 50 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதன. ஏலத்தில், விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 469-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 579-க்கும், அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 302-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரத்து 889-க்கும், அதிகபட்சம் ரூ.18 ஆயிரத்து 369-க்கும் ஏலம் போயின. மொத்தம் 1,950 மூட்டை மஞ்சள் ரூ.86 லட்சத்துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.