கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி: அமைச்சர் தகவல்
கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.;
கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு அரசு சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு மருத்துவமனை மற்றும் விளையாட்டுத்திடலை திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத்தலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழக முதல்வர் தளர்வுகள் அளித்துள்ளதால் இனி சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம். தமிழகத்தில் மொத்தம் 300 சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பட்ஜெட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.187 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மிகச்சிறந்த இயற்கை சுற்றுலாத்தலமாகும். இங்கு சுற்றுலாத்துறைக்காக 13 ஏக்கர் பரப்புள்ள நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு ஓட்டல், தங்கும் இல்லம், பொழுது போக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லிமலையில் உள்ள பிரசித்திபெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது. படிப்படியாக கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.