மக்கள் குறைதீர் முகாம்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.;
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பகுதிகளில் மக்கள் குறைதீர் முகாம்கள் நடைபெற்றன. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
நிகழ்ச்சியில் 1,168 பயனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பிலான நல உதவித் திட்டங்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் போன்றவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
டிஆர்ஓ கதிரேசன், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, முன்னாள் எம்.பி. சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.