ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: அதிமுக கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலை நடத்தக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 29ம்தேதி திங்கள்கிழமை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தல் திடீரென தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது.
ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் இண்டவாது முறையாக ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலை உடனடியாக நடத்தக்கோரியும், அ.தி.மு.க.வை சேர்ந்த 8 ஒன்றிய கவுன்சிலர்கள், பா.ஜனதா, சுயேச்சை என தலா ஒருவர் என மொத்தம் 10 ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்து விளக்கத்தை பெற்றுக் கொள்ளமாறு அதிகாரிகளும், போலீசாரும் கூறினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போராட்டம் நடத்திய 10 கவுன்சிலர்களும் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷிடம் அவர்கள் கொடுத்த மனுவில், எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.