கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலையில் கேட்பாரற்று கிடந்த 40 கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-22 09:00 GMT

பைல் படம்.

கொல்லிமலையில் விலங்குகளை வேட்டையாட லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கிகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில், வாழவந்திநாடு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை வரவழைத்து செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ்மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அவற்றை வைத்திருப்பவர்கள் தாமாக முன் வந்து போலீசில் ஒப்படைத்தால் கைது நடவடிக்கை இருக்காது. போலீசார் ரெய்டு நடத்தி கண்டுபிடித்தால் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம் பின்புறம் உள்ள முட்புதரில், துப்பாக்கிகள் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், எஸ்ஐ கெங்காதரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News