எருமப்பட்டியில் 3வதாக பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த தாய் கைது
எருப்பட்டியில் 3வதாக பெண் குழந்தையை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.;
எருமப்பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் சூர்யா. இவருடைய மனைவி கஸ்தூரி (27). இவர்களுக்கு ஏற்கனவே சிவரஞ்சினி (6), பிரியதர்ஷினி (4) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரிக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் யாரிடமும் சொல்லாமல் பிறந்த குழந்தையை அன்றே எடுத்துச் சென்று விட்டனர்.
பின்னர் கடந்த 13.4.2021 அன்று குழந்தை இறந்து விட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, எருமப்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பெற்றோரிடம் விசாரித்தபோது, குழந்தை இறந்து விட்டதால் உடலை புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெற்றோரை அழைத்துச் சென்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கான குழந்தையின் உறுப்புகளை எடுத்துக் கொண்டு மீண்டும் அங்கேயே உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை செய்ததில், 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கஸ்தூரி குழந்தையின் தலையில் தாக்கியதில் குழந்தை இறந்தது தெரியவந்தது. போலீசார் இதை கொலை வழக்காகப் பதிவு செய்து கஸ்தூரியை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.