எருமப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டை

எருமப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Update: 2021-10-23 02:45 GMT

எருமப்பட்டி அருகே கெஜகோம்பை கிராமத்தில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி பஞ்சாயத்தில், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அது கிராமத்திற்குள் வந்து பல ஆடுகளை அடித்துக் கொன்று விட்டதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மண்டல மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோரது தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் அருள்குமார் மற்றும் வன காப்பாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணசாமி, அகிலா, ஷர்மிளா அடங்கிய குழுவினர் கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

பின்னர் சிறுத்தை அடித்துக் கொன்றதாக கூறப்படும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் இரவு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தையின் கால்தடம் என்று கூறப்பட்டதை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News