கொல்லிமலையில் ஓரி விழா ரத்து: சிலைக்கு மாலை அணிவிக்க மட்டும் அனுமதி
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
வருகிற ஆக.3ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடர்பாகவும், ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல் குறித்தும், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், டிஆர்ஓ துர்காமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
கெரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற ஆக.3ம் தேதி, ஆடி 18 நாளன்று கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள, வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க 15 அமைப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்தல் தவிர, விழாக்கள், ஊர்வலம் உள்ளிட்ட வேறுவிதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
கொல்லிமலையில் எந்த ஒரு அமைப்பும் போஸ்டர்கள், பேனர்கள், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும், சுவர் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை. கெரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். சிலைக்கு மாலை அணிவிக்க ஒரு அமைப்பிற்கு 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திறந்தநிலை வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனங்களின் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே வர வேண்டும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொல்லிமலையில் இருந்து சென்றுவிட வேண்டும்.
காரவள்ளி, முள்ளுக்குறிச்சி ரோடு வழியாக மட்டுமே வாகனங்கள் கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்தகைகளை மீறி செயல்படுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். கூட்டத்தில், நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.