கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் தேதி மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் இங்குள்ள ஆற்றில் நீராடி அருள்மிகு அறப்பளீஸ்வரர் சாமியை வழிபாடு செய்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கொல்லிமலை வருவார்கள்.
தற்போது ஊரடங்கு தளர்வால் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லிமலை சென்று வரலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு கொல்லிமலையில் பெய்த தொடர் மழையால் அனைத்து அருவிகளிலம் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொல்லிமலை வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நீர் வீழ்ச்சிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால், கொல்லிமலை வந்த பொதுமக்கள் அங்குள்ள சிற்றாறு மற்றும் சிற்றருவியில் குளித்து, அறப்பளீஸ்வரை வழிபட்டனர்.
கொல்லிப்பாவை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். கொல்லிமலை சோளக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் திரளான சுற்றுலாப் பயணிகள் பலாப்பழம், அண்ணாசி, செவ்வாழை, மலைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளையும், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட மலையில் விளையும் பொருட்களையும் வாங்கிச்சென்றனர்.