கொல்லிமலையில் சரியாக கிடைக்காத செல்போன் சிக்னல்: ஆன்லைன் வகுப்புக்கு சிக்கல்
கொல்லிமலையில் உள்ள கிராமப்புறங்களில் செல்போன் டவர் இல்லாததால் ஆன்லைன் பாடம் படிக்கும் மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சிறந்த இயற்கை சுற்றுலாத்தலமாகும். இங்கு உள்ள மூலிகைகளை பார்வையிடுவதற்காகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் சுற்றுலா பயனிகள் வந்துசெல்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 1330 மீட்டர் உயரத்தில், மலை உள்ளது.
மலைவாழ்மக்கள் வாழும் தனி தாலுக்காவான கொல்லிமலையில் 14 பஞ்சாயத்துக்கள் 14 நாடுகளின் பெயரில் உள்ளது சிறப்பாகும். கொல்லிமலை, தின்னனூர் நாடு கிராம பஞ்சாயத்தில் உள்ள நரியன் காடு, வாசலூர்ப்பட்டி, பெரிய சோலை கன்னி, சிறிய சோலை கன்னி உட்பட பல மலை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் படித்து வருகின்றனர். தின்னனூர் நாடு பகுதியில், எந்த நிறுவனத்தின் செல்போன் டவரும் இல்லை. செம்மேட்டில் உள்ள செல்போன் டவரில் இருந்து, மிகவும் மேடான பகுதியில் குறைந்த அளவில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. அதுவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டர்நெட் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மலைப்பகுதியில் மேடு பள்ளங்கள் அதிகம் உள்ளதால் பல இடங்களில் சிக்னல் மறைக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மாணவ மாணவிகள் செல்போன் சிக்னல் கிடைக்கும் பகுதிக்கு நடந்து சென்று, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஒருசிலர், 2 கி.மீ தூரம் நடந்து சென்று தாவரவியல் பூங்கா போன்ற சிக்னல் கிடைக்கும் பகுதியில் கரட்டுப்பக்கம் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். பல மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள் 5 கி.மீ தூரம்சென்றாலும் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மின்சாரத்தடை ஏற்பட்டால் செல்போன் டவர்களும் செயல் இழந்துவிடுகின்றன.
இதுகுறித்து, செல்போன் நிறுவனங்களுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் புதிய டவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்காமல் இருக்கும் வகையில் தின்னனூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் அரசு மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்கள் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மலைவாழ் மக்களும், மாணவ மாணவிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே, மாணவ, மாணவியரின் கல்வி தடைபடாமல் இருக்க, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.பி. சின்ராஜ், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர், உடனடியாக கவனம் செலுத்தி, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கொல்லிமலை சிறுதாவர உற்பத்தியாளர்கள் அசோசியேசன் தலைவர் இளவரசு, கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.