கடன் தள்ளுபடி பட்டியல் வெளியிடக்கோரி கூட்டுறவு சங்கம் முற்றுகை

விவசாயக் கடன் தள்ளுபடி பட்டியலை வெளியிடக்கோரி, நாமக்கல் அருகே கூட்டுறவு சொசைட்டியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-24 02:30 GMT

விவசாயக்கடன் தள்ளுபடி பட்டியலை வெளியிடக்கோரி, வேட்டாம்பாடி கூட்டுறவு சொசைட்டியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி உள்ளது. இந்த சொசைட்டியில் ஏற்கனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த சொசைட்டியில் அதன்மூலம் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களுக்கான பட்டியலை உடனடியாக வெளியிடக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்,  சுமார் 2,700-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பயிர்க்கடன்களும், 150-க்கும் மேற்பட்டோர் நகைக்கடன்களும் பெற்றுள்ளோம். நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டிருந்தது. அதற்கான சான்றிதழை எடுத்துச் சென்று கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் முறையிட்டால் தங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை என கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.

தற்போது மழை பெய்து, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டு பயிர்கடன் மற்றும் நகைக்கடைன் பட்டியலை உடனடியாக வெளியிட்டுள்ள விவசாயிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News