கொல்லிமலை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொல்லிமலை, தேவனூர் நாடு பஞ்சாயத்து, அரிப்பிலாப்பட்டி கிராமத்தில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைத்து 3,000 சில்வர் ஓக் மரக்கன்றுகள், 1,000 பாக்கு மரக்கன்றுகள் வளர்க்க நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு கான்கீரிட் வீடு கட்டித்தரும் திட்டப்பணிகளை பார்வையிட்டார்.
கொல்லிமலையின் கடைகோடி கிராமமான கட்டாங்காட்டுபட்டி கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ தூரமுள்ள மண் சாலையை தார்சாலையாக மேம்பாடு செய்ய நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரிப்பிலாப்பட்டி ரேசன் கடையை பார்வையிட்டு பொருட்கள் இருப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார். பழங்குயினர் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் குழந்தைகளின் கற்றல் திறனை பரிசோதனை செய்தார். பழங்குடியின நல அலுவலர் ராமசாமி, பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.